நாக்கின் மேல் பல்லை போட்டு பேசாதிருத்தல்
பத்து கவிதைகள்
1
இறங்கி வருதல்
ஒரு கலை
___________________
இறங்கி வருதல்
ஒரு கலை
___________________
முதலில்
யாரும் கூப்பிடாதவனிலிருந்து
இறங்கி வந்தேன்
இப்பொழுது
பணிவு
என் தோள்களுக்கு
கை வந்த கலை
0o0
2
அது காதலில்லை
யாரையும் நேசிக்கும்
தூய கண்கள்
அதை
அதை என
மருகும்
வணக்கத்தின் சாக்கில்
கும்பிட்டேன் .
0o0
3
எவ்வளவு சாவகாசமாக
ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறதோ
அவ்வளவு அவசரமாக
ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறது
மேலும்
சிகரெட்டைப் பற்றி உனக்கென்ன தெரியும்?
அது
உங்கப்பன் விசிலை கேட்டவன்.
0o0
4
மனதில் இரண்டு குரல்கள்.
ஒன்று,
நன்றாக கனத்த ஒலிப்பில்
தட்டி எழுப்பி அழுத்தமான எச்சரிக்கையோடு சொன்னது
"இங்கிட்டு வேணா
நாம அங்கிட்டு போவோம் "
அடுத்த நொடியே திரும்ப ஒரு குரல்
இது முதல் குரலை மழுங்கடிக்கச்செய்யும் இன்னொரு குரல்
ஒரு டீசன்டுக்காக
நான் இரண்டாவதுக்குச் செவி சாய்த்தேன்
கடைநிலை ஊழியனென கீழ்படிந்து.
0o0
5
5
உலகம் கறுப்பு வண்ணத்தின்
அடிவருடியாய் மாறிக்கொண்டிருக்கும் பொழுதில்
எழுவேன்
மின்மினியாய்
துளித்துளியாய்
சிவப்பு நிறமாய்.
0o0
6
👇
நாக்கின் மேல் பல்லை போட்டு
பேசாதிருத்தல்
___________
வீரப்பற்கள் ஒளிர ஒளிர
கொலைக்கருவி
பகலை அந்தி செய்துகொண்டிருந்தது
சம்பவத்தைச்சுற்றி
ஜனங்கள் ஒரு கிணற்றை எழுப்பினர்
கிணற்றில் என்னை நானே வரவேற்பதுபோல்
எட்டிப்பிர்த்தேன்
புயலென வந்த காவல்துறை
விசாரிப்பில் இறங்கியது
என்னிடம் நெருங்க நெருங்க
"ஒன்றுமே தெரியாது" என்ற பூஞ்சையான சொற்றொடரை
நான் நன்றாக மனப்பாடம் செய்துகொண்டிருக்கும்போதுதான்
திடுமென பொங்கியெழுந்தது
நீதிமனம்
அது சன்னமான குமுறலில்
வாய்க்கு வந்தபடியெல்லாம்
என்னைத் தூற்றிக்கொண்டிருக்கும்
அது சன்னமான குமுறலில்
வாய்க்கு வந்தபடியெல்லாம்
என்னைத் தூற்றிக்கொண்டிருக்கும்
சமயம்
நாக்கின் மேல் பல்லை போட்டு
அஃத்திடம் பேசா...மலிருந்தது
என் எவ்வளவு விவேகமான ஒன்று.
0o0
7
கண்களின் கைகள்
ஒரு தீய ஆத்மா
அதற்கு மிகு துணிச்சலோ துணிச்சலின்மையோ இல்லை
அச்சமோ அச்சமின்மையோ ஒன்றுமில்லை
பரபரப்பான ஜனசந்தடிகளில்
தன்னிருப்பில் தானென புழங்குகிறது
வெகு சுளுவாக
எல்லாவற்றையும்
தொடுகிறது
தடவுகிறது
உரசுகிறது
கில்லுகிறது
அமுக்குகிறது
பற்றுகிறது
தடவுகிறது
உரசுகிறது
கில்லுகிறது
அமுக்குகிறது
பற்றுகிறது
எல்லாவற்றையும் பறிக்கிறது
பதுக்குகிறது
வெறும் வற்றை அள்ளியள்ளி தானமிடுகிறது
இரக்கம் வருத்தமென்றெல்லாம்
சகாயமாகக் கண்ணீர்விட்டுக்காட்டுகிறது
அரற்றுகிறது
உச்சுகொட்டுகிறது
இறுதியாக
எல்லா தீங்குகளுக்கும் படு அன்றாடத்துடன் நொந்துகொண்டு
கூப்பியது கூப்பியபடி கடந்துபோய்கொண்டிருக்கிறது
கண்களின் கைகள்.
0o0
8
கோபங்களை குணப்படுத்தும்
உணவு இடைவேளைக்கு வந்திருக்கிறோம்
டிஃபன் பாக்ஸை திறந்து
எல்லோரும் ஒரு முறை சொல்லுங்கள்
ஆ...மென்.
0o0
9
காமம் செப்பாது
__________________
காதலென நீதான் அழைத்தாய்
நீல் நெடுகிலும் வாழ்வென நீதான் கூட்டிப்போனாய்
நாளொன்று தவறாது
என்னைப்பார்த்துப் பார்த்துப் பார்த்துக்கொண்டாய்
சறுக்கும் படிகள் உற்றறிந்து
காமத்தின் மலையுச்சிக்கு ஏற்றிப்போனாய்
அங்கே ஒன்றாக நின்றோம்
ஓர் அற்பப்பதரை குத்தி வீழ்த்திய வாலொடு
உன் வீரத்துளிகளை என் மீது வடியவிட்டாய்
பின் ஒன்றாக உறங்கினோம்
பிறகுனக்கு என்ன செய்தது?
பல நூற்றாண்டுகளிலிருந்து
திடுமென விழித்த நீ
என்னை மூன்று முறை சுற்றி வந்து அங்கிருந்து ஏன்
என்னை மூன்று முறை சுற்றி வந்து அங்கிருந்து ஏன்
தலைக்குப்புர குதித்தாய் ?
உன் மனதுக்கு ஏதோ பட்டிருக்க வேண்டும் !
எனக்கது தெரியாமலே
போகட்டுமென்றா ?
அட அசடே !
இனியேனும் உன்னிருதயம் சாந்தி உண்டாகக்கடவது.
0o0
10
வலி தன் உச்சத்தை எட்டிவிட்டால்
உன் வாயைப் பொத்திக்கொள்ளச் சொல்கிறது
மீறி நீ கத்திவிட்டால்
அந்த சத்தத்தில்
தன் மண்டையை வெடித்துக்கொள்கிறது.
தன் மண்டையை வெடித்துக்கொள்கிறது.
இப்போது புரிந்திருக்குமென என்னிடம் நினைத்துக்கொண்டேன்
வாதையை மேலும் கீழுமாக
திருகுவதும் பெருக்குவதும் யாரென்று.
//vv//
ச. அர்ஜூன்ராச்.


Comments
Post a Comment